சர்வதேச பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

சர்வதேச பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

சர்வதேச பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2020 | 2:50 pm

Colombo (News 1st) ஏற்கனவே திட்டமிட்ட படி வர்த்தக பயணிகள் விமான சேவைக்காக நாடு திறக்கப்படாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அனுமதியளிக்கப்பட்ட விசேட விமானங்கள் மாத்திரமே நாட்டிற்குள் தரையிறங்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.

பயணிகள் விமான சேவையை இன்று முதல் மீள ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், ஐரோப்பிய நாடுகளில் தற்போது தீவிரமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகளை தொடர்ந்தும் இடைநிறுத்த தீர்மானித்ததாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

எனினும், ரஷ்யா, உக்ரைன் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அனுமதியளிக்கப்பட்ட விசேட விமானங்களை நாட்டிற்குள் தரையிறக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளிலிருந்து வரக்கூடிய சரக்கு விமானங்களின் பணியாளர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இன்று நாட்டிற்கு வருகை தரவிருந்த இரண்டு விமானங்களின் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

உக்ரைனிலிருந்து இன்று வருகைதரவிருந்த விமானமொன்று நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

எவ்வாறாயினும், வௌிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்கள், வௌிவிவகார அமைச்சுக்கு அறிவித்து சிவில் விமான சேவைகள் அதிகார சபையிடம் அனுமதி பெற்றதன் பின்னர் நாட்டிற்கு வர முடியும்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் பட்சத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்