அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் இடைநிறுத்தம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் இடைநிறுத்தம்

by Staff Writer 24-12-2020 | 3:16 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையிலிருந்து அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர் செல்வம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவர் செயற்பட்டமைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். அதற்கமைய, இன்று முதல் அமுலாகும் வகையில், கதிர் செல்வம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். PCR சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அறிவிக்காது முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடிய மூன்று கூட்டங்களில் கதிர் செல்வன் பங்கேற்றுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கூறினார். இதனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர் செல்வத்திற்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவித்தார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.