அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு

அத்தியாவசிய சேவை ஊழியர்கள் வாக்களிப்பதற்காக புதிய நடைமுறை 

by Staff Writer 24-12-2020 | 8:05 AM
Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு முற்கூட்டியே வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் புதிய நமைுறைகளை தயாரிப்பதில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளை தயாரிப்பதற்காக, தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். அவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் உள்ள போதிலும், அவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் அற்றுப்போவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர், ஊடகவியலாளர்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள், சிறைக்கைதிகள் உள்ளிட்டோருக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இவ்வாறானோருக்கு தேர்தலுக்கு முன்னதாக, முற்கூட்டியே வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் நடைமுறையை சட்டத்தில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக பிறிதொரு நடைமுறை தயாரிக்க நேரிடுவதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்றத்திடம் கோரியுள்ளதாகவும் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.