தொடர் மழையால் திருகோணமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழையால் திருகோணமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2020 | 1:14 pm

Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் சில நீரில் மூழ்கியுள்ளன.

நேற்றிரவு பெய்த பலத்த மழை காரணமாக மூதூர் பெரியபாலம், நெய்தல் நகர், தோப்பூர், மல்லிகைத்தீவு, ஆலிம்சேனை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 50 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்

இதேவேளை, மூதூரில் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பெரும்போக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நீர் தேங்கியுள்ளதால் வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், 04 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் காணப்படும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பகுதிக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டை பகுதிக்கும் மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பகுதிக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் கஹவத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

மழையுடனான வானிலையின் போது இந்த பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பலத்த மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் டீ. அபேசிறிவர்தன குறிப்பிட்டார்.

தாழ்நில பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் நோக்குடன் வான்கதவுகள் திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் அதிகளவான நீரை திறக்க நேரிடும் என பொறியியலாளர் டீ. அபேசிறிவர்தன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்