காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய உதவியுடன் புனரமைக்க திட்டம் 

காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய உதவியுடன் புனரமைக்க திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2020 | 8:44 pm

Colombo (News 1st) காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

அதன் செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

50 ஏக்கர் நிலப்பகுதியில் வியாபித்துள்ள காங்கேசன்துறை துறைமுகம் 70 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது.

இது 1400 மீட்டர் அலை தாங்கியைக் கொண்டதுடன், கடந்த காலங்களில் கொழும்பு, காலி பகுதிகளுக்கு சீமெந்து கொண்டு செல்வதற்கும் இது பயன்படுத்தப்பட்டது.

யுத்த காலத்தில் இந்த துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகளவில் செயலிழந்ததுடன், அலை தாங்கியை புனரமைப்பு செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் Exim வங்கியினால் 20 வருட கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட45 மில்லியன் அமெரிக்க டொலர் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதன் முதற்கட்டமாக துறைமுகத்தின் அலை தாங்கி புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இதனிடையே காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைந்து புனரமைக்க எதிர்பார்த்துள்ளதாக கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன குறிப்பிட்டார்.

காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவிற்கு பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்