by Staff Writer 23-12-2020 | 8:04 PM
Colombo (News 1st) COVID-19 ஒழிப்பு தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
தடுப்பூசியை இரண்டு முறைகளில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதுவர் ஊடாக ரஷ்யாவின் தடுப்பூசி தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஏனைய தடுப்பூசிகள் தொடர்பிலும் ஆராய்வதாகவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் பதில்களுக்கு ஏற்ப, அதற்கான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தயாராகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
Pfizer, Moderna என்பவற்றை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதினால், அவர்களின் இலங்கை முகவர்கள் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பூசிகளை நேரடியாக அந்தந்த நாடுகளில் அரசாங்கங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் உற்பத்தி செய்வதினால், இலங்கையின் அரச நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கை முகவராக அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மருந்து உற்பத்தி மற்றும் விநியொக ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று பிற்பகல் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.