நேற்றைய தினம் திருகோணமலையில் 42 பேருக்கு தொற்று

428 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் : திருகோணமலையில் மாத்திரம் 42 பேருக்கு தொற்று

by Chandrasekaram Chandravadani 23-12-2020 | 8:59 AM
Colombo (News 1st) நேற்று (22) முதல் இன்று (23) காலை வரையான காலப் பகுதியில் நாட்டில் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 101 பேரும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் 12 பேர் அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 42 பேரும் கம்பஹாவில் மூவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேரும் யாழ்ப்பாணத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் அடங்குகின்றனர். இவர்களில் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 35 பேரும் களுத்துறை மாவட்டத்தின் அடலுகம கிராமத்தை சேர்ந்த 162 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பொரளை பிரதேசத்தில் 42 பேர், தெமட்டகொடை பகுதியில் 03 பேர், புளூமென்டல் பகுதியில் ஒருவர், மட்டக்குளியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர். நேற்றைய தினம் (22) வெலிக்கடை சிறைச்சாலையின் 68 வயதான ஆண் கைதி ஒருவர், கொழும்பு - 15 பகுதியை சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர், தர்க்காநகரை சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், மக்கோனை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு - 10 பகுதியை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுவர் ஒருவர் மற்றும் கொழும்பு - 07 பகுதியை சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் உட்பட நேற்றைய தினத்தில் மாத்திரம் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், நாட்டில் மொத்தமாக 38,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றிலிருந்து 29,300 பேர் குணமடைந்துள்ளனர்.