21 நாட்களான சிசுவின் உடல் தகனம்: அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பெற்றோர் மனு தாக்கல்

by Staff Writer 23-12-2020 | 8:21 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றால் உயிரிழந்த 21 நாட்களான சிசுவின் உடலை தகனம் செய்த முறையில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து குழந்தையின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சிசுவின் பெற்றோர் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர். கொழும்பு-15 ஐ சேர்ந்த முஹம்மட் மஹ்ரூப், மொஹம்மட் பாஹிம் மற்றும் பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜயசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆரம்ப நிலை சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் COVID ஒழிப்பு விவகாரம் தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ள, சுகாதார அமைச்சின் சஞ்ஜீவ முனசிங்க, அரச செயலாளர் டொக்டர் அமல் ஹர்ஸ டி சில்வா மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். திடீரென மரணித்த சிசுவின் உடலை தகனம் செய்வதற்கான எவ்வித தேவையும் இருக்கவில்லை எனவும் COVID-19 காரணமாக உயிரிழந்த 19 பேரின் உடல்கள் அவ்வேளையிலும் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, காலியில் கொரோனாவினால் மரணித்ததாகக் கூறப்படுகின்ற ஜனாஸா தொடர்பில் ஏற்கனவெ வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தின் படி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், காலி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். காலி தேதுவ பிரதேசத்தை சேர்ந்த 84 வயதானவர் COVID-19 தொற்றினால் மரணித்துள்ளமையினால் அவரது ஜனாஸாவை தகனம் செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர் உத்தரவிட்டுள்ளார். எனினும், COVID-19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அந்த ஜனாஸாவை தகனம் செய்யாமல் வைக்குமாறு கோரி காலி நீதவான் நீதிமன்றத்தில் அவரது உறவினர்கள் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான் சுகாதார சேவை பணிப்பாளர் ஆலோசனையின் படி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தின் படி செயற்படுமாறு சுகாதார சேவகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன காலி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.