மேலும் நால்வரின் மரண பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு

மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 11 பேரில் மேலும் நால்வரின் மரண பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff Writer 23-12-2020 | 6:03 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த 11 கைதிகளில் மேலும் 04 பேர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயம் மற்றும் COVID -19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக ஐவரடங்கிய விசேட நிபுணர்கள் குழு, வத்தளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, நிபுணர்கள் குழு இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளது. மரண பரிசோதனை மேற்கொண்டு இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 04 கைதிகளின் சடலங்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 3 ஆம் திகதி வழங்கவும் நீதவான் தீர்மானித்துள்ளார். உயிரிழந்த கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்ததுடன், அதற்கு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார். எந்த கைதிகளுக்காக இந்த சட்டத்தரணிகள் மன்றில் விடயங்களை முன்வைக்கின்றனர் என்பது தொடர்பில் தௌிவாகக் குறிப்பிடாமையால், அவர்களுக்கு விடயங்களை முன்வைக்க அனுமதி வழங்க வேண்டாம் என அரச சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான கட்டளை எதிர்வரும் 30 ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த நீதவான், எதிர்வரும் 28 ஆம் திகதி அடிப்படை ஆட்சேபனையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார். இதேவேளை, மஹர சிறையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த 04 கைதிகளின் மரண பரிசோதனை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கைதிகளின் மரண விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.