நாட்டின் சில பகுதிகளில் 100 மி. மீ வரை மழை

by Staff Writer 23-12-2020 | 7:21 AM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றும் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மழையுடனான வானிலையால், நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் களுகல்ஓயா நீர்த்தேக்கங்களில் சில வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், மகாவலி அதிகார சபைக்கு உரித்தான கலாவாவி, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு, கிழக்கு மத்திய, வட மேல், ஊவா, வட மத்திய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாகாணங்களில் வசிக்கும் 2,623 குடும்பங்களை சேர்ந்த 8,021 பேர் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுளளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமல் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.