திருகோணமலைக்குள் பிரவேசிக்க வேண்டாம்

திருகோணமலைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 23-12-2020 | 6:28 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிப்பதை இயலுமானவரை தவிர்க்குமாறு மாவட்ட கொரோன ஒழிப்பு குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 03 நாட்களில் மாத்திரம் திருகோணமலையில் 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் சமன் தர்சன குறிப்பிட்டார். எதிர்வரும் விடுமுறை நாட்களில் திருகோணமலை மாவட்டத்திற்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுலாப் பயணங்களை இயலுமானரை வரையறுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார். இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு திருகோணமலை நகரில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பாதுகாப்பு துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிப்போர் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், காவலரண்கள் மற்றும் சோதனைச்சாவடிகளை அதிகரிக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, திருகோணமலை மூதூர் பொலிஸ் நிலையத்தில் 13 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். இதனால் மூதூர் பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடி தேவையான சுகாதார செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அழகையா லதாகரன் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்