1000 ரூபா சம்பளம்: வழங்க முடியாது என்கின்றன நிறுவனங்கள், தலையீடு செய்வோம் என்கிறது அரசாங்கம்

by Bella Dalima 22-12-2020 | 7:57 PM
Colombo (News 1st) அரசாங்கம் உறுதியளித்துள்ளதை போன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுமா என்பது தொடர்பில் விவாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று (21) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் M.வேலுக்குமார் தெரிவித்தார். ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு இணங்கியுள்ள தோட்டக் கம்பனிகள் தோட்டங்களை தம் வசம் வைத்துக்கொள்ளட்டும், இணங்காதவர்கள் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். கம்பனிகளால் 1000 ரூபா சம்பளம் வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, சம்பளத்திற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்நிலையில்,
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானம் 1000 ரூபாவாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் நாம் உள்ளோம். இலங்கையில் உள்ள 23 பெருந்தோட்ட நிறுவனங்கள் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். இது தொடர்பிலான கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையிலே சம்பிரதாயபூர்வமாக கைச்சாத்திடப்படுகிறது. அந்த உடன்படிக்கையில் பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் ஆரம்பத்தில் கைச்சாத்திட வேண்டியுள்ளது. இது தொடர்பில் நாம் விடுத்த கோரிக்கைக்கு பெருந்தோட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தினர். எனினும், இந்த வருடம் எமது நாட்டிலும் உலகிலும் ஏற்பட்டுள்ள கொவிட் பிரச்சினை காரணமாக, அனைத்துத் துறைகளும் செயலிழந்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், மீண்டும் நாம் எமது கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அவர்களின் பதில்களும் கிடைத்தவண்ணமுள்ளன. இதனை வழங்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அரசாங்கம் என்ற வகையில் இதில் நாம் தலையீட்டாளராக செயற்படுகின்றோம்.
என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார். எதிர்காலத்தில் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்தையின் போது, அரசாங்கம் என்ற வகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் தலையிடும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, ஜனவரி முதல் 1000 ரூபா கொடுப்பனவை வழங்கத் தவறும் நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவுத் திட்ட உரையில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் 1000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழிகின்றேன். இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்டக் கம்பனிகள் முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபாரத் திட்டத்தைக் கொண்ட கம்பனிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாட்டினை ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.