பிரித்தானியாவில் இருந்தான விமானங்கள் இரத்து 

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் விமானங்கள் இரத்து 

by Chandrasekaram Chandravadani 22-12-2020 | 2:19 PM

Colombo (News 1st) பிரித்தானியாவிலிருந்து பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது அதிகரித்து வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரித்தானியாவிலிருந்து இன்று நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு PCR மேற்கொண்டதன் பின்னர் சுகாதார தரப்பினரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 14 நாட்கள் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படவுள்ளனர். ஹோட்டல்களில் இருந்து வௌியேறியதன் பின்னர் மேலும் 14 நாட்கள் அவர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. லண்டனிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் சரக்கு விமானங்களில் அலுவலக பணியாளர்களும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் கூடும் COVID ஒழிப்பு குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளில் தயாரிக்கப்படும் COVID தடுப்பூசி தொடர்பில் முழுமையாக ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்கக்கூடியவர்கள், தேவைப்பாடு, முன்னுரிமை வழங்கல் ஆகியன தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தோட்டங்கள், தொடர்மாடிக் குடியிருப்புகள், விடுதிகள் உள்ளிட்ட கொரோனா தொற்று பரவக்கூடிய இடங்கள் மற்றும் குழுவினர் தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்கும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்