தடுப்புமருந்தை 27 EU நாடுகள் பயன்படுத்த பரிந்துரை

கொரோனா தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் பயன்படுத்த பரிந்துரை

by Staff Writer 22-12-2020 | 8:07 AM
Colombo (News 1st) Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்தை அமைப்பின் 27 நாடுகளும் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஔடத கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள சுமார் 448 மில்லியன் பிரஜைகளும் இதனை வழங்க ஐரோப்பிய மருத்துவச்சபை அங்கீகாரமளித்துள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா ஆகியவற்றில் இந்த தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவும் அதன் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்தநிலையில் தடுப்பு மருந்து விநியோகம், அமைப்பிலுள்ள சில நாடுகளில் நேற்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தொற்றினால் 311,000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நத்தார், புதுவருட பண்டிகை விடுமுறையின் போது மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் கொரோனா பரவலடைவதற்கான அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இதனையடுத்து ஜேர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு முடக்கல் நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மிக விரைவாக தொற்றக்கூடிய, புதிய வகையான கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவி வருவதையடுத்து, அந்நாட்டுடனான அனைத்து மார்க்க போக்குவரத்தையும் ஐரோப்பிய நாடுகளும் இந்தியா உள்ளிட்ட வேறுசில நாடுகளும் இடைநிறுத்தியுள்ளன.