by Staff Writer 22-12-2020 | 11:53 AM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க, களுத்துறை - தெற்கு, மீகொடை, அம்பாறை மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் விபத்துகள் பதிவாகியுள்ளன.
அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உகன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து வந்தவர் ஆகியோர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் அம்பாறை - சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.