சமூக வலைத்தள பயனாளர்களை பதிவு செய்தல் தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல

by Staff Writer 21-12-2020 | 8:21 PM
Colombo (News 1st) சமூக வலைத்தள ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைக்கு தயாராகவில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அமைச்சர் இது குறித்து தௌிவுபடுத்தியுள்ளார். சமூக வலைத்தள ஒழுங்குபடுத்தல் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து, முழுமையாக அல்லது சரியான அர்த்தத்தை பிரதிபலிக்காத வகையில் பகிரப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் டிஜிட்டல் தரவு கட்டுப்பாடு மூலம் பல்வேறுபட்ட பன்னாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது அல்லது கைப்பற்றப்பட்டுள்ளது என்ற தகவலையே இதன்மூலம் அரசாங்கம் கூறுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஆக்கிரமிப்பு முறைமைகள் மூலம், பாரியளவு நிதி நாட்டிலிருந்து வௌியேறுவதால் வௌிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவோரை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அண்மையில் கூறிய கருத்தே, இந்த அறிக்கையை இன்று அவர் வௌியிடுவதற்கு காரணமாக அமைந்தது. கேள்வி - அரசாங்கம் ஊடக ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. எவ்வாறான ஒழுங்குபடுத்தலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்? பதில் - சுய ஒழுங்குபடுத்தல் கேள்வி - தௌிவுபடுத்த முடியுமா? பதில் - சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்பட்டுள்ள தவறான விடயங்கள் கையாளப்படுகின்றமை தொடர்பில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். இதற்கமைய, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் வேலைத்திட்டம் எமது அமைச்சினூடாக தயாரிக்கப்படுகின்றது. கேள்வி - சமூல வலைத்தளங்கள் மாத்திரமா? ஏனைய ஊடகங்களுமா? பதில் - இல்லை. இப்போதைக்கு அது மாத்திரமே. கேள்வி - ஊடக நிறுவனங்களுக்கு சுய ஒழுங்குபடுத்தல்? பதில் - சுய ஒழுங்குபடுத்தலுக்கு நாம் முயற்சித்தோம். நான் 2010ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது அது தொடர்பில் கலந்துரையாடினேன். அது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல், அடுத்த வாரமும் நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தை முடிவடைந்து நடைமுறைப்படுத்துவதற்கான காலம் உருவாகியுள்ளது. தேவையாக வகையில் அதனை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.