by Staff Writer 21-12-2020 | 10:36 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் வைத்தியசாலைகளின் குளிரூட்டிகளில் வைக்குமாறு உறவினர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த காலி நீதவான் நீதிமன்றம் அது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
காலி - தேதுகொட பிரதேசத்தை சேர்ந்த 84 வயதான ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கரந்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு சென்று இரு நாட்களில் மரணித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையின் பிடி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அவரது உடல் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செலப்பட்டு அங்கு PCR பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் உடலை தகனம் செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டதாக பொலிஸார் இன்று (21) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவரது உறவினர்கள் உடலை பொறுப்பேற்கவில்லை.
பின்னர் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட உத்தரவிற்கமைய அவரது உடலை கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறை குளிரூட்டியில் வைக்குமாறு அவரது மகன் கோரிக்கை விடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, இந் நிலையில் நிலைமை மோசமடையும் என்பதனாலும் வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மை என்பதனால் இது தொடர்பில் சரியான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வைத்தியசாலையில் இருந்து வீடு சென்றதன் பின்னர் மரணித்த நபருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளும் முன்னர் இது கொரோனா மரணம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மரணித்தவரின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது பிரச்சினைக்குரிய நிலைமை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி முஸ்லிம்களின் மரணம் தொடர்பில் எடுகக் வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தீர்ப்பு கிடைக்கும் வரை அவரது உடலை கராபிட்டிய வைத்தியசாலையின் குளிரூட்டியில் வைக்குமாறு கோரிக்கை விடுதத்தனர்.
இரு தரப்பினரும் விடயங்களை ஆராய்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவன பத்திரன இன்று உத்தரவிட்டார்.