Colombo (News 1st) இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் கூடாரம் அமைத்து மீனவர்கள் இன்று (20) ஆறாவது நாளாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
ஏற்கனவே உங்களுக்கு செய்திகளை அனுப்பியிருக்கிறேன். அப்படி வந்தால் நீங்களே அவர்களை பிடித்துக்கொண்டு வாருங்கள், நீங்கள் பிடிச்சுக்கொண்டு வரேக்க நான் அங்க வந்து நிப்பன். உங்களுக்கு எந்தவிதமான இங்க பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்வேன் என்று சொல்லி. ஏற்கனவே வடமராட்சியிலும் நான் அப்படி செய்திருக்கின்றேன். வருங்காலத்தில் கடற்படை கைது செய்யத் தவறினால் நீங்கள் அதைச் செய்யலாம். நான் வௌிப்படையாக சொல்கிறேன். போலித்தனமான அரசியலுக்காக நான் சொல்லவில்லை. நீங்க பிடிச்சுக்கொண்டு வாங்க. மிச்சத்த நான் பார்த்துக்கொள்றன். நான் இராஜினாமா கூட பண்ணுவன் என்னால இத தீர்க்க முடியலனு சொன்னால். இராஜினாமா பண்ணுவதற்கு கூட நான் தயாராக இருக்கிறேன்
என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கூறினார்.
அமைச்சரின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜூட் நிக்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உத்தரவாதம் நடைமுறைக்கு வராவிட்டால் எதிர்காலத்திலும் தொடர்ந்து போராடவுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.