வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரித்தானியாவுடன் WHO

புதிய வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரித்தானியாவுடன் WHO

by Staff Writer 20-12-2020 | 6:07 PM
Colombo (News 1st) புதிய வகையான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியாவுடன் நெருங்கிச் செயலாற்றுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ், பழையதை காட்டிலும் விரைவாக பரவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதனால் சம்பவிக்கும் மரணங்கள் ஒப்பீட்டளவில் குறைவடையும் என கூறப்படுகின்றது. விரைவாக இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, லண்டன் உள்ளிட்ட இங்கிலாந்தின் தென் கிழக்கு பிராந்தியங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தடுப்பு மருந்துக்கு இந்த புதியவகை கொ​ரோனா வைரஸ் வித்தியாசமாக எதிர்வினையாற்றும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனிடையே, லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என பிரித்தானிய சுகாதார அமைச்சர் மெட் ஹென்கொக் தெரிவித்துள்ளார். புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 76 மில்லியனை தாண்டியுள்ளது.