நாளாந்தம் 300 சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர அனுமதி

26 ஆம் திகதி முதல் நாளாந்தம் 300 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர சுகாதார அதிகாரிகள் அனுமதி

by Staff Writer 19-12-2020 | 2:47 PM
Colombo (News 1st) எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் 300 பேரை நாட்டிற்கு அழைப்பதற்கான அனுமதியை சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் COVID தொற்று ஒழிப்பிற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயுடன் நேற்று (18) கலந்துரையாடியதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு PCR பரிசோதனைகளை மேற்கொண்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தியதன் பின்னர் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் சுற்றுலா மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த 14 நாட்களும் ஹோட்டல்களுக்குள் தனிமையாக இருப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான PCR சோதனைகளை தரப்படுத்தப்பட்ட தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்தினூடாக எந்தவொரு வௌிநாட்டிலிருந்தும் அரச சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.