கொரோனா தொற்றாளர் எங்கும் இருக்கக்கூடும்

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா நோயாளர்கள் இருக்கக்கூடும்: சுகாதார அமைச்சு

by Staff Writer 19-12-2020 | 2:41 PM
Colombo (News 1st) நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா நோயாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சுகாதார ஒழுங்கு விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேல் மாகாணம் அபாய வலயமாக காணப்பட்டாலும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் சிறு சிறு கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து பெரும்பாலானவர்கள் வௌி மாவட்டங்களுக்கு சென்றுள்ளதால், அவர்களும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் பின்பற்றுதல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவிடத்து, மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 36,049 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 8,828 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 27,061 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்து பேரின் மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஹலவத்த, மக்கொன, கொழும்பு 15, மஹரகம, வத்துப்பிட்டிவல ஆகிய பகுதிகளில் COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. 72 வயதான ஆணொருவர், அஹலவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மக்கொன பகுதியைச் சேர்ந்த 86 வயதான பெண்ணொருவர் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 15-ஐ சேர்ந்த 76 வயதான ஆணொருவர் கொரோனா நோயாளியாக அடையாளங்காணப்பட்டதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மஹரகம பகுதியை சேர்ந்த 50 வயதான ஆணொருவர் COVID-19 தொற்று அடையாளங்காணப்பட்டதை அடுத்து கொழும்பு தெற்கு வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். வத்துப்பிட்டிவல பகுதியில் 86 வயதான ஆணொருவர் கொரோனா தொற்றினால் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.