பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மூடப்படுவதன் பின்புலத்தில் ஊழல்மிகு அதிகாரிகள் உள்ளதாகக் குற்றச்சாட்டு

by Staff Writer 19-12-2020 | 8:38 PM
Colombo (News 1st) பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நமது நாட்டில் சாதாரண மக்களுக்காக முக்கிய பங்களிப்பு வழங்கிய ஒன்றாகும். மின் கட்டணம் அதிகரிக்கும் போதெல்லாம் மக்கள் சார்பாக அதனை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவே முன்னெடுத்தது. மறுபக்கம் நாட்டு மக்களின் பல கோடி ரூபா பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் பணியையும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு செவ்வனே செய்தது. ஜனாதிபதியின் செயலாளரால் நிதிஅமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஊடாக இந்த ஆணைக்குழுவை மூடும்படி அறிவிக்கப்பட்டதை அடுத்து கடுமையாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை இரத்து செய்ய அழுத்தம் விடுக்கும் சக்திகளை இலங்கை மின்சார தொழில்நுட்பவியலாளர் ஒன்றியம் இன்று பகிரங்கப்படுத்தியது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஜனாதிபதியின் செயலாளர் செயற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார தொழில்நுட்பவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ தம்மிக குறிப்பிட்டார். ஜனாதிபதியின் செயலாளரை பொருளாதார கொலையாளியாகவே பாராளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதிகள் கருதியதாகக் குறிப்பிட்ட சஞ்சீவ தம்மிக, ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்யும் அதிகாரம் அவருக்கு உள்ளதா என கேள்வி எழுப்பினார். மின்சாரக் கட்டணத்திலும் சூழ்ச்சி செய்யவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை இல்லாமற்செய்யப் பார்ப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனிடையே, மின் உற்பத்தி திட்டம் தாமதிக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் நிராகரித்துள்ளது. மின் உற்பத்தி திட்ட செயற்பாட்டை ஆணைக்குழு தாமதித்தது என கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது என அந்த சங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மின் உற்பத்தி நிலைய திட்டம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான விலை நிர்ணயம் போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதுடன், அந்தத் திட்டங்களை துரிதப்படுத்துமாறும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் சம்பந்தப்பட்ட தரப்பை வலியுறுத்துகின்றது. குறைந்த செலவில் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க இலங்கை மின்சார சபைக்கு பூரண ஒத்துழைப்பையும் அனுமதியையும் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக ஊழியர் சங்கம் குறிப்பிட்டது. நீண்டகால குறைந்த செலவிலான மின்உற்பத்தி திட்டத்தின் கீழ் 2016-2020 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மின்சார சபையினால் 300 மெகாவாட் வலுகொண்ட பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூன்றை நிர்மாணிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விரைவாக சில தினங்களுக்குள் அனுமதியளிக்க நடவடிக்கை எடுத்ததாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.