ராவணாகந்த கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்; மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்

by Staff Writer 18-12-2020 | 7:26 PM
Colombo (News 1st) பலாங்கொடை -இம்புல்பே ராவணாகந்த கிராமத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று சென்றிருந்தார். 'கிராமத்துடன் கலந்துரையாடல்' செயற்றிட்டத்திற்கமைய, ஜனாதிபதி இன்று அங்கு சென்றிருந்தார். கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு விரைவில் தீர்வு வழங்குவது கிராமத்துடன் கலந்துரையாடல் செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இந்த ராவணாகந்த கிராமம் உள்ளது. கிராமத்திற்கு செல்லும் வீதி புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. ராவணாகந்த கிராம மக்கள் முன்வைத்த பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி அவற்றுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதற்கமைய, கிராமத்திற்கு செல்லும் 4 உள் வீதிகளை புனரமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஊராஓய மற்றும் இமோஓய ஊடாக இரண்டு பாலங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன. ராவணாகந்த கிராமத்தைச் சூழவுள்ள கட்டடிகந்த, கல்லேனகந்த மற்றும் தோரவெல்கந்த உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறினர். இதன்போது, கித்துல் உற்பத்தியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் கூறினர். பாரம்பரிய ஜீவனோபாயங்களினால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதால், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கித்துல், தேயிலைக் கொழுந்து பறித்தல் உள்ளிட்ட நாளாந்த ஜீவனோபாயத்திற்காக வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் பிரவேசிக்கும் கிராம மக்களுக்கு எதிராக தன்னிச்சையாக வழக்குத் தாக்கல் செய்வதை நிறுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதுடன், பாடசாலைகளின் அடிப்படை வசதி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனிடையே, இந்த பகுதி இளைஞர் யுவதிகளுக்காக தொழில் பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.