மார்ச் 16 ஆம் திகதி Blue Ocean வழக்கு விசாரணை

மார்ச் 16 ஆம் திகதி Blue Ocean வழக்கு மீண்டும் விசாரணை

by Staff Writer 18-12-2020 | 3:36 PM
Colombo (News 1st) நிதி மோசடி தொடர்பில் Blue Ocean Breeze மற்றும் Blue Ocean Reality ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (17) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பில் நிர்மாணிக்கப்படும் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பில் வீடுகளை வழங்குவதாகத் தெரிவித்து மக்களிடம் 270 மில்லியன் ரூபாவைப் பெற்று, இணங்கிய கால எல்லையில் அந்த சொத்துக்களை அவர்களுக்கு வழங்காமையினால் 270 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக Blue Ocean Breeze மற்றும் Blue Ocean Reality ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக வீட்டை கொள்வனவு செய்யவிருந்த ஒருவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். நேற்றைய தினம் பேசித் தீர்ப்பதற்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், பிரதிவாதிகள் அதற்கு இணங்காமையால், விசாரணை வேறொரு நாளுக்கு மாற்றப்பட்டதாக முறைப்பாட்டுத் தரப்பு சட்டத்தரணி அஷான் நவரத்ன பண்டார தெரிவித்தார். பிரதிவாதிகள் அடிப்படை ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் பிரதிவாதிகளும் முறைப்பாட்டாளர்களும் எழுத்து மூலம் சமர்ப்பித்த பின்னர் அடுத்த வருடம் மார்ச் 16 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.