கூட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது

கூட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயற்படுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

by Bella Dalima 18-12-2020 | 3:53 PM
Colombo (News 1st) விவசாயிகளின் நலன் தொடர்பில் சிந்திக்காமல் கூட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசு செயற்படுவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க தோழமைக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். பொலிஸாரின் தடையை மீறி இந்த போராட்டம் தொடர்கின்றது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை எனவும் அவற்றை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ​டெல்லியில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் இன்றுடன் 23 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில், டெல்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் மேலதிக கூடாரங்களை அமைத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய விவசாய அமைச்சர் Narendra Tomar இனால் 8 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்று வௌியிடப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் ஆளும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் ஆரம்பம் தொடர்பில் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கடிதம் நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரசு தயாராகவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.