LPL சாம்பியனானது Jaffna Stallions அணி 

by Staff Writer 17-12-2020 | 6:17 AM
Colombo (News 1st) லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் Jaffna Stallions அணி சாம்பியனானது. நேற்று (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் Galle Gladiators அணி 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி சார்பாக ஜொன்ஸன் சார்ள்ஸ் 26 ஓட்டங்களை பெற்றார். சிரேஷ்ட வீரரான சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவருக்கே உரிய பாணியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திஸ்ஸர பெரேரா 02 சிக்சர்களுடனும் 5 பவுன்டரிகளுடனும் 14 பந்துகளில் 39 ஓட்டங்களை விளாசினார். Jaffna Stallions அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றது. Dhananjaya Lakshan 03 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய Galle Gladiators அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. அதன் முதல் 06 விக்கெட்களும் 93 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தனுஸ்க குணதிலக்க ஓர் ஓட்டத்துடன் ரன்அவுட் ஆனார். அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஸ 4 சிக்சர்கள் 3 பவுன்டரிகளுடன் 17 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசி நம்பிக்கையளித்தார். அசாம் கான் 4 சிக்சர்களுடன் 17 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடினார். Galle Gladiators அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களையே பெற முடிந்தது. போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டிய Jaffna Stallions அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. போட்டியின் நாயகனாக சொய்ப் மலிக் தெரிவானார். தொடரின் நாயகன் விருது வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டது. இதேவேளை, தொடரில் கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் மக்கள் சக்தியின் விஜயராஜ், யாழ். மாவட்ட வீரர்களான தெய்வேந்திரம் டினோஷன், கனகரத்தினம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஷ்கான் ஆகியோரும் Jaffna Stallions குழாத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.