நிலந்த ஜயவர்தனவின் தொலைபேசியில் ஆவணங்கள் அழிப்பு

நிலந்த ஜயவர்தனவின் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் அழிப்பு: தடயவியல் சோதனையில் கண்டுபிடிப்பு

by Staff Writer 17-12-2020 | 3:03 PM
Colombo (News 1st) அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் மீள பெற முடியாதவண்ணம் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தடயவியல் சோதனையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் அமரகுமார, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய ஏதேனும் தடயங்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்ந்தபோது, நிலந்த ஜயவர்தனவின் தொலைபேசியில் Factory Reset செய்யப்பட்டுள்ளமையால், எவ்வித தடயங்களையும் பெற முடியவில்லை என பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் அமரகுமார தெரிவித்துள்ளார். அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் பயன்படுத்தப்பட்ட கையடக்கத்தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தேவையான தரவுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தது. இந்த பணிப்புரைக்கு அமைய, நிலந்த ஜயவர்தனவின் கையடக்கத்தொலைபேசியும் மடிக்கணினியும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் அமரகுமார சாட்சியமளித்துள்ளார். தடயவியல் சோதனைக்காக கையடக்கத்தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியன தம்மிடம் வழங்கப்பட்ட போதே Factory Reset செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் கூறியுள்ளார். அவற்றில் காணப்பட்ட தரவுகளை மீள பெற முடியாதவாறு அவை அழிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் அமரகுமார குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, கையடக்கத்தொலைபேசியில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய ஏதேனும் தரவுகள் உள்ளனவா என்பதை கண்டறிய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரின் மடிக்கணினியில் 26 இலட்சம் ஆவணங்கள் இருந்ததாகவும் அதில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலற்ற, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு தேவையான 210 தரவுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். எனினும், வழங்கப்பட்ட 210 தரவுகளில் பெரும்பாலானவற்றில் பதிவேற்றப்பட்ட தினம் புதுப்பிக்கப்பட்டுள்ளமையால், அவற்றின் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். கையடக்கத்தொலைபேசி Factory Reset செய்யப்பட்டமை தொடர்பில் நிலந்த ஜயவர்தனவிடம் விசாரணை செய்யப்பட்டதா என ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சாட்சியாளரிடம் வினவியுள்ளார். இந்த விடயம் குறித்து தாம் விசாரணை செய்ததாக பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதில் வழங்கியுள்ளார். தாம் பயன்படுத்திய கையடக்கத்தொலைபேசியை மனைவியிடம் வழங்கியிருந்ததாகவும் அதில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் தரவுகள் காணப்படக்கூடும் என்ற அச்சத்தில் அதனை Factory Reset செய்து மனைவியிடம் வழங்கியதாகவும் நிலந்த ஜயவர்தன கூறியதாக பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருடைய மடிக்கணினியில் பல தரவுகள் அழிக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றை மீள் தரவேற்றம் செய்யும் போது கண்டுபிடித்ததாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். எனினும், Factory Reset செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ள ஆவணங்களை மீள பெற்றுக்கொள்வதற்கான செயலிகள் இலங்கையில் இல்லை எனவும் இணையத்தளம் அல்லது சர்வதேச மட்டத்தில் அதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் அமரகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியளித்துள்ளார். இதற்கான விசேட அனுமதி வழங்கப்பட்டால் தாம் அதனை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்