நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

by Staff Writer 17-12-2020 | 8:04 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. COVID-19 தொற்றை ஒழிக்கும் தேசிய ​செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 5 ஆம் பிரிவு, அக்கரைப்பற்று14 ஆம் பிரிவு, அக்கரைப்பற்று நகரப் பகுதி 3 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகபிரிவின் பாலமுனை - 1, ஒலுவில் - 2 , அட்டாளைச்சேனை - 8 ஆகிய பகுதிகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று - 8/1, அக்கரைப்பற்று - 8/3, அககரைப்பற்று - 9 ஆகிய பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தவிர, மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்ட கல்லூரி கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. பாடசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வட மாகாணத்திலுள்ள அனைத்து பொதுச்சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள அனைத்து பொதுச்சந்தைகளையும் COVID-19 தொற்று நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் வரை மூடுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பலர் வியாபாரம் செய்வதைத் தடை செய்யுமாறும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்தினார். இதற்கமைய, பொதுச்சந்தைகள் மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களின் ஆபத்தான நிலையைக் கருத்திற்கொண்டு சந்தைகளை மூடுமாறு இன்று அறிவிக்கப்பட்டது.