நத்தார் பண்டிகைக் காலத்தில் ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்: கொழும்பு பேராயர் கோரிக்கை

by Staff Writer 17-12-2020 | 7:26 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகைக் காலத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் இன்று விசேட கோரிக்கை விடுத்தார். பேராயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பின்வருமாறு தெரிவித்தார்
எதிர்வரும் நத்தார் பண்டிகையின் போது ஏனைய மக்களைப் போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நான் நினைக்கின்றேன். நத்தார் பண்டிகையின் போது உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. இம்முறை அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள். ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்கள் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள். இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள பிரம்மாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளை இரத்து செய்து, அந்த நிகழ்வுகளுக்காக செலவிடப்படவிருந்த நிதியை COVID தொற்றினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு நான் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அரச வைபவங்களில் நாம் கலந்துகொள்ளவும் போவதில்லை. தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஐம்பதுக்கு மேற்படாத மக்களை ஒன்றுகூட்டி நத்தார் ஆராதனையை நடத்துவதற்கு அருட்தந்தையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து வௌியிட்டார்.
வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வரும் வேலைத்திட்டத்திலும் பணம் சம்பாதிக்கும் நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக எனக்கு அறியக் கிடைத்தது. அதாவது அங்கிருந்து வருபவர்கள் அதிக விலைக்கு விமானப் பயணச்சீட்டை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்புக்காலத்தில் ஹோட்டல்களில் சென்று தங்கும் போது அங்கும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது. சம்பாதித்த சகலதையும் அதற்காக செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இயலுமானால் விமானம் ஊடாக மாத்திரமன்றி கடல் மார்க்கமாக கப்பல் மூலம் அழைத்துவரவும் திட்டம் வகுத்தால் நல்லது
என கொழும்பு பேராயர் தெரிவித்தார்.