ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு கத்தோலிக்க, அங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபைகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு

by Staff Writer 17-12-2020 | 8:15 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. கத்தோலிக்க , அங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபைகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் போதகர்களால் அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. உடல்களை எரிக்கும் செயற்பாட்டிற்கு இவர்கள் பொரளை மயானத்தில் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாஸாக்களை தகனம் செய்வதைக் கண்டித்து மட்டக்களப்பு - ஏறாவூரில் கவனயீர்ப்பு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏறாவூர் - முகைதின் ஜூம்மா பெரிய பள்ளிவாசலின் முன்பாக இருந்து நடைபவனி ஆரம்பமானது. ஏறாவூர் பிரதேச செயலகம் வரை சென்ற இவர்கள் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். ஏறாவூர் பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் இவர்கள் கையளித்தனர். இதன்போது, பிரதேச செயலகம் முன்பாக வௌ்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.