42 மாணவர்களின் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 42 மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

by Staff Writer 17-12-2020 | 4:50 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட Z-புள்ளிக்கமைய பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு அறிவித்து இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்கு தோற்றிய 42 மாணவர்களால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, S.துறைராஜா மற்றும் யசந்த கோத்தாகொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான Z-புள்ளியில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கான புள்ளிப்பட்டியலில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் மனுவினூடாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய உரிய Z-புள்ளிகளை வௌியிடுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.