பயணங்களை மட்டுப்படுத்தி குடும்பத்தினருடன் நத்தாரை கொண்டாடுமாறு பேராயர் கோரிக்கை 

பயணங்களை மட்டுப்படுத்தி குடும்பத்தினருடன் நத்தாரை கொண்டாடுமாறு பேராயர் கோரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 1:11 pm

Colombo (News 1st) நத்தார் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மட்டுப்படுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நத்தார் பண்டிகையின் போது ஏனைய மக்களை போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நினைப்பதாக கொழும்பு பேராயர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனா நிலைமை பாரதூரமாக உள்ளதால் கொழும்பிற்குள் பிரவேசிப்பதையோ அல்லது கொழும்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்வதையோ இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் கோரியுள்ளார்.

இம்முறை நத்தாரின்போது உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்கா விட்டால், ஏனைய பகுதிகளிலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறினார்.

அத்தோடு, வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துமாறும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்க்குமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை, நத்தாரை முன்னிட்டு நடத்த திட்டமிட்டுள்ள களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளை இரத்து செய்து அந்த நிதியை கொரோனாவினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடம் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் 50 இற்கும் மேற்படாத மக்களை ஒன்றுகூட்டி ஆராதனையை நடத்த அருட்தந்தையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே நத்தாரை கொண்டாடுமாறும் வீட்டில் நத்தார் மரம் ஒன்றை அலங்கரித்து, நத்தார் குடிலொன்றை அமைத்து வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு கொழும்பு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதால் இந்த இருண்ட அத்தியாயத்திற்கு முடிவுகட்டும் வகையில் விசாரணைகளை முடிவுறுத்தி மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என நினைப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, குறைந்தது அடுத்த வருடத்திலேனும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வழி செய்வார்கள் என தாம் நம்புவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது கருத்து வௌியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்