உயர் நீதிமன்ற கட்டட தீ: CID விசாரணைகள் ஆரம்பம் 

உயர் நீதிமன்ற கட்டடத்தில் பரவிய தீ தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம் 

by Staff Writer 16-12-2020 | 8:24 AM
Colombo (News 1st) கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளள்ன. இதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 3 குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்டன. தீ பரவியமை தொடர்பில் நிர்வாகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார். மின் பொறியியலாளர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோர் நேற்று பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன், இன்றும் இரசாயன பகுப்பாய்வாளரினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகள் நேற்றிரவு விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னே சுட்டிக்காட்டினார். கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள களஞ்சியசாலையிலேயே தீ பரவியது. தீயினால் ஆவணங்களுக்கு சேதம் ஏதுவும் ஏற்படவில்லை என நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இன்று காலை நிலைமையைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என நீதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று பரவிய தீ, தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.