ஜப்பானில் 8 பெண்களைக் கொன்ற ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை

ஜப்பானில் 8 பெண்களைக் கொன்ற ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை

ஜப்பானில் 8 பெண்களைக் கொன்ற ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2020 | 3:37 pm

Colombo (News 1st) ட்விட்டர் மூலம் தன்னை தொடர்புகொண்ட 8 பெண்கள் உட்பட 9 பேரை வரவழைத்து கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 29 வயதான டகாஹிரோ சிராய்ஷி (Takahiro Shiraishi) 2017 ஆம் ஆண்டு ட்விட்டரில் கணக்கு ஒன்றைத் தொடங்கி அதில், ‘உண்மையில் வேதனையில் இருப்பவர்களுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன். தேவைப்படுகிறவர்கள் தயவுசெய்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு தகவல் அனுப்புங்கள்’ என்று கூறி இருந்தார்.

இதை உண்மை என்று நம்பி அவருடன் தொடர்புகொண்ட பெண்கள் திடீரென காணாமற்போனார்கள். இதில் ஒரு பெண்ணை பொலிஸார் தேடியபோது அந்த இளைஞர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின.

ட்விட்டர் மூலம் சிராய்ஷியுடன் தொடர்புகொண்ட 8 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, விசாரணைக்காக பொலிஸார் டோக்கியோ அருகில் உள்ள ஜுமோ நகரில் உள்ள சிராய்ஷியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

அப்போது, அங்கு துண்டுதுண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்களைக் கண்டுபிடித்தனர். 8 பெண்களைத் தவிர ஒரு ஆணையும் அவர் கொலை செய்துள்ளார். தனது காதலியை தேடி வந்த அவர், அது தொடர்பாக சிராய்ஷியிடம் விசாரித்தபோது ஏற்பட்ட மோதலில் அவரைக் கொலை செய்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவங்கள் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிராய்ஷி கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான கொலை வழக்கு டோக்கியோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை சிராய்ஷி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதன்போது, ட்விட்டர் கொலையாளிக்கு வழங்கப்படும் தண்டனையை அறிய நீதிமன்றில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்