Jaffna Stallions அணி இறுதி போட்டிக்கு தகுதி

Jaffna Stallions அணி இறுதி போட்டிக்கு தகுதி

by Staff Writer 15-12-2020 | 6:41 AM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் Jaffna Stallions அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று (14) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ளை வைகிங் அணி (Dambulla Viiking) 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. LPL கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions  அணி சார்பாக Johnson Charles 76 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர். அணித்தலைவர் திஸ்ஸர பெரோரா 7 ஓட்டங்களுடனும் சொய்ப் மலிக் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்வரிசை வீரர்கள் பெரிதாக பிரகாசிக்கவில்லை. Jaffna Stallions அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது. மிலிந்த புஸ்பகுமார 02 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய தம்புள்ளை வைகிங் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான நிலையை அடைந்தது. முதல் 7 விக்கெட்களும் 91 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் தம்புள்ளை அணி தோல்வியின் பிடிக்குள் சிக்கியது. சிரேஷ்ட வீரரான உபுல் தரங்க 33 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 29 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் தசுன் சானக்க 5 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். சகலதுறை வீரரான ரொமெஸ் மென்டிஸ் கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 26 ஓட்டங்களை விளாசி வெற்றிக்காக போராடினார். தம்புள்ளை வைகிங் அணி 19.1 ஓவரில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றியீட்டிய Jaffna Stallions அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்பிரகாரம், நாளை (16) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் காலி கிளேடியேடர்ஸ் அணியுடன் Jaffna Stallions அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.