வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் 

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் 

by Staff Writer 15-12-2020 | 10:31 AM
Colombo (News 1st) வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வாகனங்களை பதிவு செய்யும்போது, வாகன இலக்கத் தகடுகளுக்காக மாகாணத்தை இனங்காண்பதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்படும் நடைமுறையே தற்போது பின்பற்றப்படுகின்றது. இதனூடாக, பு​கைப் பரிசோதனை மற்றும் வருடாந்த வருமான வரிப்பத்திர விநியோகம் என்பனவற்றிற்கு இலகுவாக அமைந்தாலும் மாகாணங்களுக்கு இடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத் தகட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமும் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்திற் கொண்டு, வாகன இலக்கத் தகடு விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுமிடத்து திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தினூடாக வாகன தனித்துவத்தை அடையாளம் காண்பதற்கான வசதி ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாண குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.