எதிராக வாக்களிப்பதும் நடுநிலை வகிப்பதும் ஒன்றுதான்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதும் நடுநிலைமை வகிப்பதும் ஒன்று தான்: சி.வி.விக்னேஸ்வரன்

by Staff Writer 15-12-2020 | 4:15 PM
Colombo (News 1st) அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளமையினால், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதும் நடுநிலைமை வகிப்பதும் ஒன்று தான் எனவும் மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தச் செயலும் அர்த்தமற்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியின் கடமை அரசாங்கத்தை எந்நேரமும் எதிர்ப்பது என்ற கருத்தை தான் ஏற்கப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சரியான திசையில் பயணிக்க வழிநடத்த வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தான் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மீண்டும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அவ்வாறு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசித் தீர்க்க வேண்டியுள்ளதாகவும் புதிய அரசியல் யாப்பு நிர்மாணத்தை எதிர்கொண்டுள்ளமையையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளுடன் பேசுவதென்றால் பக்கசார்பின்றி இருப்பதே உசிதம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.