நேற்று கொழும்பில் மாத்திரம் 200 பேருக்கு கொரோனா 

நேற்றைய தினம் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; கொழும்பில் மாத்திரம் 200 பேருக்கு தொற்று 

by Chandrasekaram Chandravadani 15-12-2020 | 8:31 AM
Colombo (News 1st) நாட்டில் இன்று (15) காலை வரையான 24 மணித்தியாலத்திற்குள் 688 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID - 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் வௌிநாடுகளில் நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 பேரும் நுவரெலியாவில் 38 பேரும் கண்டி மாவட்டத்தில் 16 பேரும் வவுனியா மாவட்டத்தில் 07 பேரும் யாழ். மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பில் ஒருவரும் அம்பாறையில் 28 பேரும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொம்பனித்தெரு பிரதேசத்தில் 13 பேரும் கொள்ளுப்பிட்டியில் ஐவரும் பொரளையில் 65 பேரும் புளூமென்டல் பகுதியில் 8 பேரும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 07 பேரும் மட்டக்குளி பகுதியில் 38 பேரும் தெஹிவளையில் 06 பேரும் வௌ்ளவத்தையில் 10 பேரும் உள்ளடங்குகின்றனர். கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பகுதியில் 15 பேரும் நீர்கொழும்பு பிரதேசத்தில் ஒருவரும் பேலியகொடை பகுதியில் இருவரும் வத்தளையில் 41 பேரும் கடந்த 24 மணி நேரத்திற்குள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்றைய தினம் வரையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் பதிவாகிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,833 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியதை அடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 33,478 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.