குறைந்த கொடுப்பனவு வீட்டுத்திட்டம் குறித்து ஆலோசனை

குறைந்த ஆரம்ப கொடுப்பனவு வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமர் ஆலோசனை 

by Staff Writer 15-12-2020 | 10:02 AM
Colombo (News 1st) குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காக 7,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமரினால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் தொடர்பில் அந்த அதிகாரசபையின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இம்மாத இறுதிக்குள் குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்படும் 7500 வீடுகளில் 4000 வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள்குடியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன், எஞ்சிய 3000 வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒதுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்காக குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, மத்திய வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்தும் போது பயனாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை 6.25 என்ற வட்டி வீதத்தில் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, எதிர்காலத்தில் கலைஞர்களுக்காகவும் வீடமைப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டளவில் 150,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய நகர அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்