இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு வலியுறுத்தி வட பகுதி மீனவர்கள் போராட்டம் 

by Staff Writer 15-12-2020 | 8:32 PM
Colombo (News 1st) இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. முல்லைத்தீவில் கடற்றொழில் அமைப்புகளும் மீனவர்களும் இணைந்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் இதன்போது வலியுறுத்தினர். இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதனிடையே, முல்லைத்தீவிலுள்ள வர்த்தக நிலையங்கள் பொதுச்சந்தைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்ததுடன் தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் போக்குவரத்தை நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். அத்துடன், யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டன. இதன்போது, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடமும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. இதனிடையே, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். COVID -19 தொற்று ஒழிப்பு தொடர்பான விசேட சுற்றிவளைப்பின் போது இந்திய மீனவர்கள் 36 பேரும் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இவர்களின் 5 மீன்பிடி படகுகளும் வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ​ இந்திய மீனவர்கள் 36 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தவுள்தாகவும் கடற்படை அறிவித்துள்ளது. அத்துடன் மன்னார், கதிரமலை கடற்பரப்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். மறுபுறத்தில், தமிழக மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டமொன்று இராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது. மீன் வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் மீனவர் சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. COVID-19 காரணமாக காணொளி கலந்துரையாடலூடாக பேச்சுவார்த்தையை நடத்த இலங்கை, இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்