LPL இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தகுதி

LPL இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தகுதி

by Staff Writer 14-12-2020 | 2:16 PM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் Galle Gladiators அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று (13) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் Colombo Kings அணி தோல்வியடைந்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், ஒன்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் 15 இற்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். Daniel Bell-Drummond 70 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார். லக்‌ஷான் சந்தகேன் 03 விக்கெட்களை கைப்பற்றியதுடன் நுவன் துஷார, தனஞ்சய லக்‌ஷான் ஆகியோர் தலா 02 விக்கெட்களை வீழ்த்தினர். வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய காலி கிளேடியேட்டர்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான நிலையை அடைந்தது. முதல் 6விக்கெட்களும் 98 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஸ 33 ஓட்டங்களையும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக்க 13 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்காக 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 4 பந்துகளிலும் 11 ஓட்டங்கள் பெறப்பட்டன. இசுரு உதான வீசிய இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுன்டரி விளாசிய லக்‌ஷான் சந்தகேன் காலி அணிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். போட்டியில் காலி கிளேடியேட்டர்ஸ் அணி 02 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஒரு சிக்சர் இரண்டு பவுன்டரிகளுடன் இறுதிவரை களத்தில் நின்று 31 ஓட்டங்களை பெற்ற பந்துவீச்சு சகலதுறை வீரர் தனஞ்சய லக்‌ஷான் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.