கொரோனா தடுப்பூசியை வழங்க 3 குழுக்கள் நியமனம்

கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு 3 குழுக்கள் நியமனம்

by Staff Writer 14-12-2020 | 2:37 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட தொடர்பாடல் குழுவினூடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த குழுக்களுக்கு மேலதிகமாக 3 உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த உப குழுவினூடாக நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கிணங்க, அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நாட்டின் சனத்தொகையில் 10 வீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.