ஆஸியில் கடற்கரைகள் புயலால் அள்ளுண்டு செல்லப்பட்டன

ஆஸியின் Byron குடாவின் கடற்கரைகள் புயலால் அள்ளுண்டு செல்லப்பட்டன 

by Chandrasekaram Chandravadani 14-12-2020 | 6:27 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் பைரன் (Byron) குடாவின் பிரசித்தி வாய்ந்த கடற்கரைகள் புயலால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரப்பகுதிகள் புயலினால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கடலரிப்பினால் குறித்த கரையோரத்தின் பகுதியளவு கடலில் அள்ளுண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுவதுமாக அழிவடைந்துள்ளதாக நகர மேயர் சைமன் ரிச்சாட்சன் (Simon Richardson) கூறியுள்ளார். 1,000 கிலோமீற்றர் நீளமான கடற்கரைப்பகுதி மிகப்பலத்த மழை மற்றும் கடற்கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 08 மீற்றர் உயரத்திற்கு எழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாரியளவுக்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பன் மற்றும் கோல்ட் கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் மின்சார விநியோகக் கட்டமைப்பு அழிவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. சுமார் 700 இற்கும் அதிகமான உதவி கோரிய அழைப்புகள் தமக்கு கிடைத்ததாக அவுஸ்திரேலிய அவசர சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வௌ்ளத்தில் சிக்குண்டிருந்தவர்களில் அரைவாசிப்பங்கினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் அறிவித்துள்ளது. இதனிடையே மிகப்பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் மேலும் புயல்கள் சில ஏற்படக்கூடுமெனவும் அவுஸ்திரேலிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.