கவ்வாத்து கத்தியால் கலைப் படைப்புகளை உருவாக்கும் சண்முகநாதன் மனோகரன்...

by Staff Writer 13-12-2020 | 8:31 PM
Colombo (News 1st) கவ்வாத்து கத்தி... இந்த பெயரைக் கேட்டாலே எமக்கெல்லாம் ஞாபகம் வருவது தேயிலைச் செடி தான். செடிகளின் பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் ஒரு கூரிய கத்தியே இதுவாகும். ஆனால், இந்த கத்தியால் கலைப் படைப்புகளையும் உருவாக்க முடியும் என என நிரூபித்து வருகின்றார் புசல்லாவை டெல்ட்டா தோட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் மனோகரன். கிடைக்கின்ற ஓய்வு நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் தமக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் மனோகரன், வெறுமனே கவ்வாத்து கத்தியை மட்டுமே பயன்படுத்தி இந்த படைப்புகளை செய்து வருகின்றார். கனவு காணுங்கள் என்ற அப்துல் கலாமின் கூற்றுக்கு அமைவாக தனது படைப்புகளை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற பாரிய அவாவுடன் தனது படைப்பில் ஈடுபடுகிறார். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களிலேயே சிற்பங்களை செதுக்குவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார் என பெற்றோர் கூறுகின்றனர். சிறுவயதிலிருந்தே கலை ஆர்வம் கொண்ட மனோகரன், அதனை கற்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனை மலையக இளைஞர்களுக்கு கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றமை சிறப்பம்சமாகும்.