by Staff Writer 13-12-2020 | 2:22 PM
Colombo (News 1st) கள ஆய்வின்றி காணிகளில் மணல் மற்றும் மண் அகழ்வதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த அனுமதிப்பத்திரங்கள், தென்னந்தோட்டங்களில் மணல் அகழ்வதற்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட மேல் மாகாணத்தில் தென்னந்தோட்டங்களில் மணல் அகழப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
தென்னந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் காணப்படினும், அங்கு மணல் மற்றும் மண் அகழ்வதற்கான அனுமதி கோரப்பட்டால், குறித்த பகுதிகள் வேண்டுமென்றே தரிசாக விடப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறும் சுற்றாடல் அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள், நிகழ்காலத்தில் வருடாந்த தேங்காய் உற்பத்தி பாதிப்படைவதற்கும் தேங்காயின் விலை அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.