பண்டிகைக் கால முடக்கல் தொடர்பில் தீர்மானம் இல்லை

பண்டிகைக் கால முடக்கல் தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை: சவேந்திர சில்வா தெரிவிப்பு

by Staff Writer 12-12-2020 | 7:00 PM
Colombo (News 1st) கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் சில இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டன. மட்டக்குளி ரந்திய உயன, முகத்துவாரம் மெத்சந்த செவன, முகத்துவாரம் மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ், தெமட்டகொடை பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளே விடுவிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்று வளாகத்தினுள் நடமாட முடியும் என்றாலும், குடியிருப்பு வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். விடுவிக்கப்படாதுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு விரைவில் PCR பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களையும் விடுவிக்க எண்ணியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்கள் தொடர்பில் அவர் பின்வருமாறு தெரிவித்தார்,
வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் COVID தொற்றுக்குள்ளாகவில்லை என்று உறுதி செய்யப்பட்டால், வீட்டிற்கு சென்று அங்கு 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை. இது குறித்த கடிதம் இன்று அல்லது நாளை வெளியிடப்படும்
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் நாடு மீண்டும் முடக்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் அப்போதைய நிலைமையின் அடிப்படையில், ஜனாதிபதி தலைமையில் செயலணி கூடி பரிசீலிக்கும் என சவேந்திர சில்வா கூறினார். நாட்டை முடக்கவோ, ஊரடங்கு சட்டம் போடுவது தொடர்பிலோ தற்போதைய நிலையில் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், COVID-19 தொற்று நிலைமைக்கு அமைவாக மாற்றம் ஏற்படக்கூடும் என அவர் தௌிவூட்டினார்.