விஜிதபுர கோட்டையை அண்மித்துள்ள தொல்பொருள் தொகுதி சேதம்: 10 பேர் கைது

விஜிதபுர கோட்டையை அண்மித்துள்ள தொல்பொருள் தொகுதி சேதம்: 10 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2020 | 10:11 pm

Colombo (News 1st) விஜிதபுர கோட்டையை அண்மித்துள்ள தொல்பொருள் தொகுதியை சேதப்படுத்திய சந்தேகத்தில் அனுராதபுரம் – இபலேகம, அழகப்பெருமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுர வலய குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

எல்லாளனுக்கும் துட்டகைமுனுவிற்கும் இடையில் 4 மாதங்கள் யுத்தம் இடம்பெற்றதென்பதே விஜிதபுர கோட்டையின் பண்டைய வரலாறு.

அனுராதபுரக் கோட்டையைத் தவிர்த்து எல்லாளனின் பிரதான மறைவிடமாக விஜிதபுர கோட்டை அடையாளப்படுத்தப்படுவதுடன், அது மிகவும் வளம் நிறைந்த கோட்டையாக வரலாற்றில் போற்றப்படுகிறது.

இந்த விஜிதபுர கோட்டை எவ்விடத்தில் அமைந்துள்ளதென்பது இன்னும் உறுதியாக கணிக்கப்படவில்லை.

அனுராதபுரம் கலாவாவியை அண்மித்து விஜிதபுர கோட்டை அமைந்துள்ளதென நம்பப்படுவதுடன், கண்காணிக்கப்படாத பாரியதொரு நிலப்பரப்பு விஜிதபுர கோட்டையை அண்மித்துள்ளதால், அதுவும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு இந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் அடையாளம் தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

அழகப்பெருமாகம பிரதேசத்தில் எல்லை மதிலொன்றை நிர்மாணிக்கும் போது இந்தத் தொல்பொருள் பிரதேசம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விஜிதபுர கோட்டையை அண்மித்து தொல்பொருள் தொகுதி அரசாங்கத்தின், மகாவலி மற்றும் தனியார் இடங்கள் வரை நீண்டிருப்பதால், அவ்விடத்தில் ஏதேனும் நிர்மாணங்களை மேற்கொண்டால் அது குறித்து தமது திணைக்களத்தை தெளிவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட கிராமத்தவர்களுக்கு கிராம சேவகர் ஊடாக அறிவுறுத்தியுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், குறித்த நிர்மாணப் பணிகள் அந்த அறிவுறுத்தலை கவனத்திற்கொள்ளப்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பாக வடமத்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டது.

எனினும், கடந்த காலத்தில் வட மத்திய மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

வெவ்வேறு சட்டவிரோத செயல்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக தொல்பொருள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென புதிய அறிக்கையின் மூலம் கணக்காய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்