வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் அமைதியின்மைக்கு மத்தியில் நிறைவேற்றம்

by Staff Writer 11-12-2020 | 9:44 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அமைதியின்மைக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரதேச சபை தவிசாளர் சோபா ரஞ்சித் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று காலை சபைக்குள் பிரவேசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வருகை தந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதான வாயிலை மூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். பிரதேச சபை செயலாளர் பத்மலோஜினி லிங்கேஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மயக்கமுற்றார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வருகை தந்ததை அடுத்து உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் குறித்த பகுதிக்கு பொலிஸாரும் கலகத்தடுப்பு பிரிவினரும் வருகை தந்திருந்தனர் சில பிரதேச சபை உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து, தவிசாளரை மீட்கும் நடவடிக்கையில் ஆளும் தரப்பினர் ஈடுபட்டபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. அதனை அடுத்து, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கதவினை உடைத்து தவிசாளரை மீட்டபோது எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அமைதியின்மையின்போது காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மயக்கமடைந்த பிரதேச சபையின் செயலாளர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். மட்டக்களப்பு கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு கடந்த 8 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஶ்ரீலங்கா சுந்திரக் கட்சியை சேர்ந்த சபையின் உபதவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருவரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.