வரவு செலவு திட்டத்தின் படி உடனடியாக அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்

by Staff Writer 11-12-2020 | 4:03 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல விடயங்களை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான கடன் சலுகை, சூரியசக்தி மின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான கடன் சலுகை, பிரிவெனாக்களில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கான சலுகைகள், COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் மத்தியதர வர்த்தக செயற்பாடுகளுக்கான மூலதன கடனை பெற்றுக் கொடுத்தல் ஆகியன உடனடியாக செயற்படுத்தப்படவுள்ளன. COVID-19 தொற்றுக்குள்ளாகிய அரச ஊழியர்களின் செலவுகளை காப்புறுதி நிதியத்தினூடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்கவும் அரசாங்கத் தீர்மானித்துள்ளது. உள்ளூர் பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக பால் பண்ணையாளர்கள் வலுப்படுத்தப்படவுள்ளனர். அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு வீடுகளை பெற்றுக்கொள்வதற்கான கடன் வசதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று (10) நிறைவேற்றப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.