Colombo (News 1st) வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக மீண்டும் பேசப்படுகிறது.
கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கு முதலீட்டாளர் ஒருவர் தேவை என கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக இந்தியாவின் அதானி கூட்டு நிறுவனத்தின் தயார் நிலை மற்றும் அவர்களின் இயலுமை தொடர்பாக அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கக் காலத்தில் இந்தியா, ஜப்பான், இலங்கை ஒன்றிணைந்த வர்த்தகமாக இந்த முனையத்தை நடத்திச்செல்வது தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவதானித்து, அதானி கூட்டு நிறுவனத்தை முதலீட்டுக்காக இணைத்துக்கொள்ளும் இயலுமை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் குழுவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய துறைமுக, பெருந்தெருக்கள், மின்சார, நீதிமன்ற மற்றும் கைத்தொழில் அமைச்சுகளின் செயலாளர்கள், திறைசேரியின் மேலதிக செயலாளர், துறைமுக அதிகார சபையின் தலைவர் ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் உள்ளடக்கப்பட்டனர்.
எனினும், இந்த ஆலோசனைக் குழு இன்னும் கூடவில்லை என துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார்.
கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இந்தியாவின் அதானி கூட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் கீழ் நடத்திச் செல்ல முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
துறைமுக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர், பிரசன்ன களுதரகே பின்வருமாறு தெரிவித்தார்
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நூற்றுக்கு 51 வீதத்தை நாம் வைத்துக்கொண்டு 49 வீதத்தை வேறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என உள்ளது. இதனை முன்னெடுக்க நமக்கு பணமில்லை என்றும் அந்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்வதற்கு நம்மிடம் பணமிருக்கிறது என்பதனை அமைச்சருக்கு நாம் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். செயற்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. எனவே, நமக்கு முதலீடு தேவையில்லை. நாம் கடன்பெறத் தேவையில்லை. கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் சக்தி இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உள்ளது
பாரிய கப்பல்களை இலகுவாக செலுத்தி திருப்பும் வசதியுள்ள ஆழ்கடல் பகுதியைக் கொண்ட கிழக்கு முனையம் 70 ஏக்கர் நில பரப்பளவைக் கொண்டதாகும்.
தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டத்தின் மூலம் முனையத்தின் செயற்பாடுகள் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.